ஜனாதிபதியின் இல்லத்தில் பசிலோடு பேச்சுவார்த்தை : ஜூன் மாத இறுதியில் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது.

இருவருக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அனைத்துக் கட்சிகளிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவை கேட்பது சிறந்தது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சந்திப்பின்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App