2024 வரவு -செலவத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள உயர்வை கோரும் தொழிற்சங்கங்கள்!

பல அரச துறை தொழிற்சங்கங்கள் 2024 வரவு -செலவத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரியுள்ளன.

தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி, தற்போதுள்ள ஊதிய நடைமுறை செலவுகளை சமாளிக்க போதுமானதாக இல்லை, எனவே அரசாங்கம் எதிர்வரும் வரவு -செலவத் திட்டம் மூலம் 20,000 ரூபாவை மேலதிக கொடுப்பனவு அல்லது சம்பள உயர்வாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளன.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நண்பகல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண அரச சேவையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் இன்றைய எதிர்ப்பு பிரசாரத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்றும் நாளையும் தமது சேவைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியமையினால் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக PHI தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் இதர செலவுகளின் அதிகரிப்பு காரணமாக தற்போதைய கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்பதால், அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு PHIக்கள் கோருகின்றனர்.

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் மூலம், அதன் உறுப்பினர்களின் அவலநிலை குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாக PHI தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பெரும்பாலான PHIக்கள் இன்று சேவையில் இருந்து விலகினாலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக வைத்திய பிரிவுகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படாது என PHI தெரிவித்துள்ளது.Published from Blogger Prime Android App