ஆனால் சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் மூன்று மாதங்களுக்கு முன்னரே அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருந்தது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தொழில் அமைச்சில் புதன்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சம்பள அதிகரிப்பு கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருவதை நாங்கள் காண்கிறோம். ஆனால் அரச, தனியார் மற்றும் தோட்ட துறையினருக்கு சம்பளம் அதிகரிக்க அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு முன்னரே தீரமானித்திருந்தது. இவர்கள் இப்போது போராட்டம் செய்கின்றனர்.
அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு தீர்மானத்தின் எமது பங்காக தனியார் துறையின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க ஆரம்ப கலந்துரையாடல் நடத்தி, தொழில் ஆலோசனை சபையின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தோம். அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையிலேயே வரவு செலவு திட்டத்தில் இதனை செய்வோம் என ஜனாதிபதி எங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். அப்போது ஜனாதிபதி தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக எமக்கு தெரிவித்தார்.
சிலரின் அறியாமையாலும், அனுபவமின்மையாலும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், நாட்டின் அரச வருமானத்தை இல்லாமல் செய்தார்கள். ஆனால் தற்போதைய ஜனாதிபதி இந்த வரி விகிதங்களை மீண்டும் அதிகரித்து அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன் பிரகாரம் நாங்கள் அதிகமாக சம்பளம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க வரி தொகையை பெற்றுக்கொண்டோம். என்றாலும் உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் குறைவாகவே நாங்கள் வரி அறவிடுகிறோம்.
எவ்வாறு இருப்பினும் நாங்கள் வரவு செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள இருக்கின்ற விடயத்தை அறிந்து கொண்டதால் தான் இவர்கள் வீதிக்கி இறங்கி சம்பள அதிகரிப்பு கோரி போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இவர்களின் போராட்டம் மூலம்தான் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்து, அவர்களின் சங்கங்களுக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளவே இவர்கள் முயற்சிக்கின்றனர். எனவே, சம்பள அதிகரிப்பு செய்ய நாங்கள் அமைச்சரவையில் தீர்மானித்திருக்கிறோம். அதனால் அரச ஊழியர்களை வெயிலில் நிறுத்துவதை நிறுத்துமாறு கேட்கிறோம் என்றார்.