
பொருளாதார கொலையாளிகள் கோட்டாபய, மஹிந்த, பசில் என பெயர் குறிப்பிட்டுக்கூறி இவர்கள் தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவென எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியதால், கொதித்தெழுந்த பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் சிலர், சஜித்தை தாக்க முற்பட்டதுடன் அவரின் கையிலிருந்த கோப்புக்களையும் பறித்தெடுத்தனர்.
இதனால் சபையில் பதற்றநிலை ஏற்பட்டதையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (21) ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், கருத்துரைத்த சஜித், “நரிகளுக்கு நான் பயந்தவன் அல்ல. தனி ஒருவனாக நான் தயார். முடிந்தால் வாருங்கள் பார்க்கலாம்” என அழைத்தார்.
பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து விசேட கேள்விக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நேரம் வழங்கப்பட்டது.
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் , நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என, பொருளாதார கொலையாளிகள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மஹிந்த , கோட்டாபய, பசில் உள்ளிட்டவர்கள் தொடர்பாக பாராளுமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன வெனக் கேள்வி எழுப்பி உரையாற்றிக்கொண்டிருந்தார்.
அரச தரப்பின் பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் சிலர் அவரின் உரைக்கு எதிராக கூச்சலிட்டனர். ஒழுங்குப்பிரச்சினைகளை எழுப்பினர். எனினும் இந்த இடையூறுகளை கட்டுப்படுத்த சபாநாயகர் முயலவில்லை.
அரச தரப்பினரின் கூச்சல் குழப்பங்களை, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. நளின் பண்டார . தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பதை கண்ட சபாநாயகர் அந்த நடவடிக்கையை நிறுத்துமாறு பல தடவைகள் தெரிவித்தார். என்றாலும் அவர் தொடர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவரை நெருங்கி அவரை தாக்க முயற்சித்த போது படைக்கல சேவிதர் உட்பட உதவியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவரை நெருங்கவிடாமல் அவரையும் ஏனைய அரச தரப்பு எம்.பி.க்களையும் தடுத்தனர்.
எனினும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, திடீரென எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வின் கையிலிருந்த கோப்புக்களை பறித்துக்கொண்டு சென்றார்.
சபை நடுவுக்கு வந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு சபாநாயகரும் தெரிவித்தார். எனினும் அரச தரப்பினர் அதனை காதில் வாங்கவில்லை. இதனையடுத்து சபை நடவடிக்கையை 5 நிமிடங்களுக்கு இடைநிறுத்துவதாக காலை 10,35 மணிக்கு அறிவித்து சபை நடவடிக்கையை இடைநிறுத்தினார்.
சபை நடவடிக்கையை 5 நிமிடங்களுக்கு இடை நிறுத்துவதாக சபாநாயகர் 10: 35 மணிக்கு அறிவித்தநிலையில் மீண்டும் சபை நடவடிக்கை 11: 15 மணிக்கே சபாநாயகர் தலைமையில் ஆரம்பித்தது.