மட்டக்களப்பு லிற்றில் பட்ஸ் முன்பள்ளியின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு வைபவமும்

மட்டக்களப்பு லிற்றில் பட்ஸ் முன்பள்ளியின் 2023ஆம் ஆண்டுக்கான நிறைவு விழாவும் பரிசளிப்பு வைபவமும் அதிபர் திருமதி மிதுளா முகுந்தன் அவர்களின் தலைமையில் 24.01.2024 ஆம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது. 

இவ்விழாவில் பிரதம அதிதியாக முதன்மை உளவளத்துணையாளரும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான முதன்மைப் பயிற்றுநருமான திரு.முத்துராஜா புவிராஜா அவர்களும் கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா அவர்களும் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திரு.சாம்பசிவம் பரணீதரன் அவர்களும் வாகரை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.வீ.சிவரஞ்சன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

இவர்களுடன் விஷேட அதிதிகளாக லிற்றில் பட்ஸ் முன்பள்ளியின் இயக்குநர் திரு.எஸ்.முகுந்தன், லிற்றில் பட்ஸ் முன்பள்ளியின் தலைவர் திரு.கே.சிவசண்முகராஜா, செங்கலடி மத்திய கல்லூரி ஆசிரியை திருமதி. சிந்துஜா காந்தரூபன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். 

இங்கு ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

இந்நிகழ்வில் பிள்ளைகள் ஆடல்,பாடல்கள், பேச்சு போன்ற அரங்க நிகழ்ச்சிகள் மூலம் தமது ஆற்றல் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். நிறைவில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் அதிதிகளினால் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

விழாவை சிறப்பான முறையில் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளியின் அதிபர், ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.Published from Blogger Prime Android App