நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் எவ்வளவுதான் பலப்படுத்தப்பட்டாலும், நாடு உலகத்துடன் முன்னேறி மாற்றமடையாவிட்டால் அது பின்னோக்கிச் செல்லும் என்றும் சுட்டிக்காட்டினார்.
நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் 2022 வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதியை மாணவர்கள் அன்புடன் வரவேற்றதுடன், சிரேஷ்ட மேற்கத்திய இசைக்குழு, சிரேஷ்ட கிழக்கு இசைக்குழு மற்றும் நடனக் குழுவினர் ஜனாதிபதியை விழா மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெற வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் 2022 இல் குறைந்த விடுமுறை எடுத்த ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதி பரிசில்களை வழங்கினார்.
நான்கு மாணவிகளுக்கு அவர்களின் சிறப்புத் தகுதிகளுக்காக விருதுகளையும் ஜனாதிபதி வழங்கியதுடன், கல்லூரியில் 2022 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த மாணவிக்கான “கலாநிதி சுமேதா ஜெயவீர” விருது ஜி. டி. ரனலி இமாஷா விமலரத்ன மாணவிக்கு வழங்கப்பட்டது.
அதிபர் கலாநிதி சுமேதா ஜயவீர ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாடசாலையின் விசேட அதிதிகள் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் இட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
நான் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதன் முடிவுகளை இன்று காணலாம். எனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலப்பகுதியில் நான், சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரிக்கு அருகிலேயே வசித்தேன். கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சியடைய விடாமல் திட்டமிட்டு நாட்டை கட்டியெழுப்ப முடிந்தது. இது போதுமானது அல்ல. இன்னும் 05 முதல் 10 ஆண்டுகள் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும். நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும். நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் வேகமாக வளரும் சமுதாயத்தில் இணைவீர்கள். அதற்கு உங்களை தயார்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.