(ஆ.நிதாகரன்)
சர்வதேச அன்னையர் தினம் இன்று(12) அனுஸ்ரிக்கப்படுகின்றது.
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ˮ என ஒளவைப் பாட்டியார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள் யாதெனில் அன்னையர் தான் நாம் இவ்வுலகில் கண்ணால் காணும் முதல் தெய்வமாகும்.
அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த பெறுமதி மிக்க உறவாகும். அன்னையர்கள் பல வித சவால்களைச் சந்தித்து அவை எல்லாம் எதிர்த்துப் போராடி சாதனை படைத்து வருகின்றனர். இத்தகைய போற்றதற்குரிய அன்னையர்களுக்காகக் கொண்டாடப்படும் தினமே அன்னையர் தினமாகும்.
வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த சொல் அம்மா. எதிர்பார்ப்பில்லா உறவின் அடையாளம் அம்மா. அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். எல்லோருடைய வாழ்விலும் தாயின் பங்கு அளப்பரியது. அன்னை என்ற சொல்லின் வலிமை மிகப்பெரியது. அன்னையின் பாசத்திற்கு மயங்காதவர் இவ்வுலகில் எவருமிலர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அல்லது மே 12ஆம் திகதி, சர்வதேச அளவில் அன்னையர் தினமானது சிறப்பிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சிறப்பிக்கப்பட்ட அன்னையர் தினம், பிற்காலத்தில் உலகளவில் பரவினாலும், ஒவ்வொரு நாடுகளை பொறுத்து திகதி என்பது மாறுபடுகிறது. அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட 'அன்னா ஜார்விஸ்' என்ற ஆர்வலரின் முயற்சியே பின்னாளில் உலக அளவில் அன்னையர் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த 1854 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது பிறந்த அன்னா என்ற பெண்மணியின் தாய், தனது சகோதரர்களை அம்மை, டைபாய்டு, டீப்திரியா போன்ற நோய்களின் தாக்கத்தில் இழந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் தாயார் 'ரீவ் ஆன் ஜார்விஸ்', தனது சுய அனுபவத்தின் மூலமாக குழந்தைகளின் இறப்பை தடுக்கவும், சுகாதாரத்தை பேணுவதற்கும் அங்குள்ள பெண்களுக்கு தாய்மையை போற்றி வழிகாட்டும் நபராக இருந்தார். இதற்காக தனது வாழ்நாளையும் செலவிட்ட நிலையில், அன்னையருக்கான தினம் வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது இதுவே பிற்காலத்தில் அன்னையர் தினமாக சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
