ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் கறுப்பு கொடிப் போராட்டம்!

யாழ்ப்பாணப், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த நிலையிலேயே, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியார்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு மற்றும் நீண்ட காலமாகத் தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கக்கோரி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கட்டமொன்றைக் கோலாகலமாகத் திறந்து வைப்பதற்காக வருகைத் தந்திருந்த ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளின் செயற்பாட்டை கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.Published from Blogger Prime Android App