செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த யாழ் ஆனந்தன் ஈஸ்டர் தாக்குதலுடனும் தொடர்பு ?

பாதாள உலக தாதா கெஹெல் பத்தர பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணையில் இஷாரா செவ்வந்தி மாட்டுப்பட்டதுடன், செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மாட்டுப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாக தெரிவித்திருந்த செவ்வந்தியை பாதுகாப்பு அதிகாரிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடங்கள் பற்றிய விபரங்களையும் பெற்றுள்ளனர்.

செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியதாக கருதப்படும் ஆனந்தன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஆனந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பலரை கடல் வழியாக அவர் தப்பிச் செல்வதற்கு உதவிய விடயம் வெளிவந்திருக்கிறது.

ஆனந்தன், கடலின் நீரோட்டத்தை வைத்து பிரயாணங்களை தீர்மானிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றவர் என கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்க, ஜே.கே. பாயுடன் சேர்ந்து ஆனந்தன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தி வருவது போன்ற குற்றங்களை செய்துள்ளார்.