வைத்தியரைத் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் பிணையில் விடுதலை – வீட்டிலிருந்த குண்டு காரணமாக மீண்டும் விளக்கமறியலில்!

​அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

​அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அவரை 50,000 ரூபா ரொக்கம் மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் ஆகியவற்றின் பேரில் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

​எனினும், பின்னர் அந்த சந்தேகநபரின் வீடு சோதனை செய்யப்பட்டபோது, வீட்டினுள் இருந்து ஒரு கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

​​கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இரவு, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்று வந்த 32 வயதுடைய விசேட வைத்திய நிபுணர் ஒருவர், தனது உத்தியோகபூர்வ உறைவிடத்தில் வைத்து இனந்தெரியாத ஒருவரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தார்.

​

​இந்தச் சம்பவம் தொடர்பில் பின்னர் கைது செய்யப்பட்டவர், நிலந்த மதுர ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இராணுவ சேவையில் இருந்து தப்பிச் சென்றவர் ஆவார்.

​இவர் கால்கனேவ, நவனகரைய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்றும், வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்றும், மேலும் பௌத்த பிக்குவாகவும் இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

​பாதிக்கப்பட்ட வைத்தியர் அடையாளம் காணும் அணிவகுப்பில் முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளார்.