தமிழீழத்தின் மூத்த ஓவியர் ரமணி மறைவு என் ஆழ்ந்த இரங்கல்

 

தமிழீழத்தில் 2005 ஆம் ஆண்டு என்னுடைய "புயலின் நிறங்கள்" ஓவியக் காட்சி நடத்துவதற்காக சென்றபோது, தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி, சு.ப. தமிழ்ச்செல்வன் முயற்சியால் தமிழீழ நுண்கலைக் கல்லூரிப் பொறுப்பாளர் கண்ணதாசன் அவர்கள், என்னுடனான ஓவியர்கள் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். 

யாழ்ப்பாணத்திலிருந்து ஓவியர்கள் ஆ.இராசையா, இரமணி எழுத்தாளர் ந.சத்தியபாலன் முல்லைத்தீவிலிருந்து ஓவியர் இராசன் ஆகியோரும் வந்திருந்தனர். அன்றுதான் ஓவியர் ஓவியர் ரமணி அவர்களை முதன் முதலில் சந்தித்தேன்.


கிளிநொச்சி சமாதான செயலகத்தில் அச் சந்திப்பு நடைபெற்றது. அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் அச் சந்திப்பு நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற அச் சந்திப்பில் தமிழீழத்தில் ஓவியக் கலை வளர்ச்சிக்கு என்ன செய்வது, ஓவியர்களுடைய வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது, ஓவியக் கலையில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்களுக்கு எந்த வகையில் நம்மால் உதவ முடியும், ஓவியர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என பல நிலைகளில் கலந்துரையாடல் அமைந்தது. 


நான் தங்கியிருந்த டாங்க் வியூ விடுதியில் தான் அவர்களும் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதனால் அன்றைய இரவுப் பொழுதில் மாமரம் சூழ்ந்த திறந்த வெளியில் அமர்ந்து கோடைக் காற்று எங்கள் கலந்துரையாடலுக்கு இதம் சேர்க்க எங்கள் கருத்துகளை பகிந்து கொண்டோம். 


என்னுடைய நூல்கள் அனைத்தையும் ரமணி அவர்கள் மிகவும் ஆர்வமாகப் பார்த்தார். கருத்துகளை பகிர்ந்தார். 


அதன் பிறகு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் என்னுடைய ஓவியக் காட்சி நடைபெற்றபோதும், இராமநாதன் நுண்கலை அகாடமியில் மாணவர்களிடையே சிறப்பு விரிவுரை ஆற்றியபோதும் உடன் இருந்தார். 


2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “தமிழமுதம்” நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட போது நான் தங்கியிருந்த விடுதிக்கு என்னை சந்திக்க வருகைதந்த ஓவியர்கள் கலைஞர்கள் “ரமணி உங்களை விசாரித்ததாக சொல்லச் சொன்னார். உடல்நிலை சரியில்லாததால் அவரால் வர இயலவில்லை” என்றார்கள். 


இயக்கத்தோடும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடும் ஒன்றிணைந்து செயல்பட்டவர். 


அவர் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


ஓவியர் புகழேந்தி