அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதாகியுள்ளார்.
சுரேஷ் சாலே - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிகத் தீவிர விசுவாசி.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த மிகப்பெரும் தலைகளில் சுரேஷ் சாலேயும் ஒருவர் என்கிற குற்றச்சாட்டு மிக நீண்ட காலமாக உள்ளது.
TMVP என்கிற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிள்ளையானின் நெருங்கிய சகாவும், TMVPஇன் முக்கியஸ்தருமாக இருந்த ஆசாத் மௌலானா - சேனல் 4 ஊடகத்துக்கு வழங்கிய சாட்சியத்திலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே இருந்தார் எனக் கூறியிருந்தார்.
சுரேஷ் சாலேயுடன் 2006ஆம் ஆண்டிலிருந்து ஆசாத் மௌலானாவுக்கு பழக்கம் இருந்துள்ளது. அப்போது சுரேஷ் சாலே மேஜர் தரத்தில் இருந்தார். ஆனால் 2005ஆம் ஆண்டிலிருந்து சுரேஷ் சாலேயுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருந்துள்ளது.
TMVPயினருக்கும் சுரேஷ் சாலேக்கும் இடையிலான தொடர்புகளின் போது, சுரேஷ் சாலே - 'ஷாம்' எனும் குறியீட்டுப் பெயரால்தான் அழைக்கப்பட்டார். பிள்ளையானுக்கு 'பப்பா' எனும் குறியீட்டு பெயர் இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 'அல்ஃபயா' எனும் குறியீட்டுப் பெயர் இருந்தது.
புலிகள் இயக்கத்திலிருந்து பிள்ளையான் பிரிவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டவர்களில் சுரேஷ் சாலேயும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
சுரேஷ் சாலே - மலே சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழ் ஓரளவு தெரியும். அவர் மிகவும் கெட்டித்தனமான புலனாய்வு அதிகாரி.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராணுவத் தலைமையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் சந்திக்கும் அனைத்துக் கூட்டங்களிலும் சுரேஷ் சாலே இருப்பார்.
அந்தக் கூட்டங்கள் அநேகமாக ஆங்கிலத்திலேயே நடக்கும். ஆசாத் மௌலானாவுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பினருக்கு தமிழில் ஆசாத் மௌலானா மொழிபெயர்ப்புச் செய்வார்.
சிலவேளைகளில் பிள்ளையானுக்கு தகவல்களை கொடுப்பதென்றால் ஆசாத் மௌலானாவையே சுரேஷ் சாலே தொடர்பு கொள்வார்.
அந்தக் காலப் பகுதியில் பிள்ளையான், கருணா மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோருக்கு மூன்று செய்மதித் தொலைபேசிகள் சுரேஷ் சாலே மூலம் வழங்கப்பட்டிருந்தன. ஒரு கட்டத்தில் கருணாவிடமிருந்த தொலைபேசியை மீளப் பெற்றுக் கொண்டார்கள்.
TMVP செய்ததாக சந்தேகிக்கப்படும் அரசியல் படுகொலைகளின் பின்னணியில் சுரேஷ் சாலே இருந்தார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றோரின் கொலைகளுக்குப் பின்னால் - அவரும் இருந்தார் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் - ஆசாத் மௌலானா வழங்கிய சாட்சியத்தில் இந்த விடயங்களையெல்லாம் தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சாலே, அந்தக் கொலைகள் தொடர்பிலும் விசாரிக்கப்படக் கூடும்.
கோட்டபாய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், ஆரம்பத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்படவில்லை என தெரியவருகிறது.
அப்படியொன்றால்?
ராணுவம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்துவதென்று ஆரம்பத்தில் முடிவாக இருந்துள்ளது.
பின்னர் எப்படி - கிறிஸ்தவ தேவாலயங்கள் பக்கம் அந்தச் சதித் திட்டம் திரும்பியது?!
ஆசாத் மௌலானா தற்போது சுவிஸர்லாந்தில் வசித்து வருகின்றார். இவர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்குத் தெரிந்த உண்மைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 2022ஆம் ஆண்டு 07 நாட்கள் தொடர்ச்சியாக வழங்கியிருந்தார்.
அதில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே மற்றும் பிள்ளையான் ஆகியோர் - ஈஸ்டர் தாக்குதலுடன் எவ்வாறு தொடர்புபட்டனர் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
பின்னர் சேனல் 4 ஊடகத்துக்கும் அவர் பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் - தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நபர்கள், ஆசாத் மௌலானாவை ஜெனீவாவில் சில தடவை சந்தித்துள்ளார்கள் எனவும் தெரிய வருகிறது.
மேலும், ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் விரும்புகின்றது.
எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்கு, ஆசாத் மௌலானா இலங்கை வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
ஆனாலும், சுவிஸர்லாந்து பிரஜையாக அல்லது சுவிஸர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இரட்டை பிரஜாவுரிமைகளைக் கொண்டவராகவே இலங்கை வருவதற்கு ஆசாத் மௌலானா விரும்புகின்றார் எனத் தெரியவருகிறது. அந்த ஏற்பாடுகள் முடிவடைந்ததும், இலங்கைக்கு ஆசாத் மௌலானா வருவார் என நம்பலாம். தற்போது அவர் சுவிஸர்லாந்தில் தனது குடும்பத்துடன் அகதி அந்தஷ்தில் உள்ளார்.
TMVP எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பாதுகாப்பு அமைச்சிலிருந்து 2005 முதல், பெருந்தொகை நிதி வழங்கப்பட்டு வந்தது. அதனை சுரேஷ் சாலேதான் பெற்றுக் கொடுத்தார் என அறிய முடிகிறது.
2006ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பணத்தை TMVPக்காக பெற்றுக் கொள்ளும் பொறுப்பை ஆசாத் மௌலானா ஏற்றிருந்தார்.
ஆரம்பத்தில் 30 லட்சம் ரூபாய் பணம் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டது. பின்னர் அது 60 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இது தவிர விசேட நடவடிக்கைகளுக்காக மேலதிக பணம் வழங்கப்பட்டது.
இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தலொன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக - கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டுமென்பது - ராஜபக்ஷ தரப்பின் திட்டமாக இருந்தது எனும் குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.
அதற்காக TMVP மற்றும் சஹ்ரான் போன்றோரைப் பயன்படுத்தி, ராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதலொன்றை மேற்கொள்வதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது எனக் கூறப்படுகிறது.

அதன் மூலம் LTTEயினர் திரும்பவும் வந்து விட்டார்கள் எனக் காட்டுவதே நோக்கமாக இருந்துள்ளது.
LTTEயினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கிளைமோர் குண்டுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. சுரேஷ் சாலே இதனை திட்டமிட்டிருந்தார் என தகவல்கள் கூறுகின்றன. இதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால், ஆசாத் மௌலானா சாட்சியமாக வழங்கியுள்ளார். ஆனாலும் சேனல் 4 ஊடகத்திடம் அவர் இதனைக் கூறவில்லை.
வவுணதீவில் இரண்டு பொலிஸாரைக் கொன்று விட்டு அவர்களின் துப்பாக்கிகளை சஹ்ரான் குழுவினர் களவாடிச் சென்றதும், LTTEயினர் மீள் உருவாகி விட்டார்கள் என்று காட்டுவதற்காகத்தான்.
ஆனால், ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் கை விடப்பட்டு, தேவாலயங்கள் ஏன் குறிவைக்கப்பட்டன என்பது குறித்து ஆசாத் மௌலானவுக்கு தெரிந்திருக்கவில்லை.
நல்லாட்சிக் காலத்தில் குற்றங்களுடன் தொடர்புடைய படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வந்தனர். அப்போது, ஒரு தடவை ஆசாத் மௌலானாவை தனது வாகனத்துக்குள் வைத்துப் பேசிய சுரேஷ் சாலே; "ஆசாத் நீங்க 'பப்பா'விடம் (பிள்ளையான்) சொல்லுங்கள், நமது ஆள் 'அல்ஃபோ'வை (கோட்டா) கொண்டு வந்தால்தான், நாம் எல்லோரும் தப்ப முடியும். இல்லா விட்டால் கடும் பிரச்சினைகள் ஏற்படும். 'அல்ஃபோ'வை கொண்டு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று பப்பாவிடம் சொல்லுங்கள்" என்றார்.
தனது வாகனத்துக்குள் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆசாத் மௌலானாவுடன் சுரேஷ் சாலே பேசிக் கொண்டிருந்தார் என, நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பு: ஓர் ஊடகவியலாளராக எனக்கு கிடைத்த சில முக்கிய தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இவற்றை எழுதுகிறேன். சுரேஷ் சாலேயுடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்ட தரப்பினர்களாக அவர்கள் உள்ளனர். தகவல்களை வழங்கியவர்கள் தங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்கிற உறுதிமொழியைப் பெற்றுள்ளார்கள். எனவே, செய்தி மூலங்களை - அவர்களின் விருப்பமின்றி வெளிப்படுத்தக் கூடாது எனும் ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைய, அவர்கள் யார் என்பதை, இங்கு நான் தெரிவிக்க முடியாது.