அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, கனடாவின் பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இந்தச் சந்தேகநபர் 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முதற்கட்டமாக 7 புகார்கள் கிடைத்திருந்தன.
இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேகநபைக் கைது செய்ய பலமுறை முயற்சித்த போதிலும், அவர் அதிகாரிகளிடம் சிக்காமல் தொடர்ச்சியாகத் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளுடன் இணைந்து அதிகாரிகள் நடத்திய விசேட கூட்டுச் சுற்றிவளைப்பின் போது, குச்சவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இந்தச் சந்தேகநபருக்கு எதிராக நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை ஆகிய நீதிமன்றங்களில் ஏற்கனவே பல நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன், இவருக்கு எதிராக மேலும் பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது நடத்தப்பட்டுள்ள விரிவான விசாரணைகளின் படி, இந்தச் சந்தேகநபர் பல்வேறு நபர்களிடமிருந்தும் மோசடி செய்துள்ள ஒட்டுமொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துளளது