
மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் 13.56 சதவீத மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் கடும் வறட்சி, தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்காக அதிகளவில் டீசலை பயன்படுத்த வேண்டியுள்ளமையால் உற்பத்திச் செலவினம் அதிகரித்துள்ளது.
தற்போது எதிர்பார்க்கப்படும் வருமானத்தை விட, செயல்பாட்டுச் செலவுகளுக்கு மேலதிகமாக 15.8 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதால் இந்த விலை உயர்வு கோரப்பட்டுள்ளது.
கட்டணத்தை அதிகரிப்பதா? அல்லது தற்போதைய நிலையிலேயே பேணுவதா என்பது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.
எனினும், மின்சார சபையின் கடந்தகாலக் கடன்கள் எதுவும் புதிய கட்டணக் கணிப்பீட்டில் சேர்க்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால் தெரிவித்துள்ளார்.