அனுர அரசின் அடக்குமுறைகளுக்கு நிலாந்தன் கண்டணம்! போதைப் பொருளை வைத்து போராட்டத்தை அடக்கும் மிக கேவலமான செயல்!

போதைப் பொருளை வைத்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கும் மிக கேவலமான குற்றச் செயல்களை  செய்யும் அளவுக்கு அனுர அரசாங்கத்தில் உள்ள பாதுகாப்பு தரப்பின் மனநிலை உள்ளதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை முடக்குவதற்கு ம், அடக்குவதற்கும் பாதுகாப்பு தரப்பினர் கையாண்ட நடைமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டத்திற்கு அம்பாறையில் இருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களை ஏற்றி வந்த பேருந்தில் கஞ்சா போதைப் பொருளை வைத்து அவர்களை பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கைது செய்ய முயற்சி செய்த செயல் ஜனநாயகத்திற்கும், போராடும் கருத்து சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடு என்பதோடு வேறு எந்த அரசாலும் மேற்கொள்ளப்படாத செயற்பாடுகளை பாதுகாப்பு தரப்பினர் அனுர அரசில் மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டத்தையும் பொலீசார் தடுத்து நிறுத்தி இருந்தனர்.


தமிழ் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடாத்தும் போது அவர்களுக்கு நீதி வழங்காது குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசு பாதிக்கப்பட்டவர்களை போராடுவதற்கு கூட அனுமதிக்காது போராட்டங்களை  வன்முறைகளை பிரயோகித்து அடக்குவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.


இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று எட்டு வருடங்களிலேயே தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிங்கள அரசு முன்னெடுக்க தொடங்கியது.

அதாவது 1956 ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தது முதல் இன்று வரை தமிழர்களுக்கான உரிமைகளை வழங்காது இழுத்தடிக்கும் இலங்கை அரசு.


தங்களது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கானஉரிமைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களையும் கொன்று குவித்தது.


2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது.


 தமிழர்களின் உரிமைகளை பறித்தது மட்டும் அன்றி வடகிழக்கு மலையகம் என நாட்டின் எல்லா பகுதிகளிலும் வாழ்த தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமல்லாது .

 இன்று இலங்கையின் சுதந்திரத்தை பிராந்திய, உலக வல்லரசுகளிடம்இழந்து தவிக்கின்றனர். 


இன்று வடகிழக்கு மட்டும் அல்ல இலங்கையின் முழு பிரதேசங்களிலும் அன்னிய நாடுகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. நாட்டில் உள்ள பல இடங்களை அரசாங்கம் பல நாடுகளின் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. 

இன்று இலங்கை அரசாங்கத்தால் சுயாதீனமாக இயங்க முடியாது உள்ளது. இலங்கை இலங்கை மக்களுக்கு சொந்தமில்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில். 


இலங்கையின் வடகிழக்கு தமிழர் தாயகத்தை பாதுகாப்பதற்காக போராடிவரும் தமிழர்களை அழித்து அவர்களது வாழ்விடங்களை பறிப்பதற்காக முயற்சி செய்வது எதிர்காலத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் வல்லரசுகளிடம் இழப்பதற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.